உள்ளூர் செய்திகள்

அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்களை படத்தில் காணலாம். 

கியாஸ் சிலிண்டர் கிடங்கு அமைக்க எதிர்ப்பு :வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்

Published On 2023-06-17 09:47 GMT   |   Update On 2023-06-17 09:47 GMT
  • கிராம மக்கள் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
  • உரிய விசாரணைக்கு பிறகு கியாஸ் சிலிண்டர் கிடங்கு அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அரூர்,

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம், எட்டிப்பட்டி அழகிரி நகரில், கியாஸ் சிலிண்டர் கிடங்கு அமைக்கும் பணிகள் தனியார் நிறுவனம் சார்பில் நடைபெறுகிறது. இந்த கியாஸ் சிலிண்டர் அமைக்கும் இடம் அழகிரி நகரில் குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் இருப்பதாக புகார் தெரிவித்து கிராம மக்கள் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த சாலை மறியல் சம்பவம் தொடர்பாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கில் தொடர்பு இருப்பதாக எட்டிப்பட்டி அழகிரி நகரைச் சேர்ந்த செந்தில்குமார், வீரமணி, தின்டன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, அழகிரி நகரைச் சேர்ந்த 3 பேரின் கைது சம்பவத்தை கண்டித்து, எட்டிப்பட்டி அழகிரி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது முற்றுகையில் ஈடுபட்ட கிராம மக்களிடம் அரூர் வட்டாட்சியர் பெருமாள் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய விசாரணைக்கு பிறகு கியாஸ் சிலிண்டர் கிடங்கு அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அளித்த உறுதியின் பேரில் கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

Similar News