உள்ளூர் செய்திகள்

வைகை பாலன்.

துப்பாக்கி முனையில் நகை, பணத்தை பறித்த ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் கைது

Published On 2024-03-29 09:16 GMT   |   Update On 2024-03-29 09:16 GMT
  • இது குறித்து ராமுத்தாய் தல்லாக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
  • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குளிச்சிபட்டியைச் சேர்ந்தவர் ராமுத்தாய் (வயது 72). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். முதல் மகன் நடராஜன். கப்பலில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு மதுரை ஆத்திகுளம் குறிஞ்சி நகரில் உள்ளது.

இந்த வீட்டில்தான் ராமுத்தாய் தங்கி இருந்தார். நடராஜன் அனுப்பிய ரூ.15 கோடியே 62 லட்சத்து 35 ஆயிரத்து 236 பணம் ராமுத்தாயின் சகோதரி மகன் பாலமுருகனின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன் மூலம் மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொத்துக்கள் வாங்கப்பட்டது.

இந்த சொத்துக்களுக்கு பாலமுருகன் காப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். மேலும் ராமுத்தாய் வசம் இருந்த நகை மற்றும் சொத்துக்களை பாலமுருகன் மற்றும் அவரது மனைவி சேர்ந்து வெற்றுத்தாளில் கையெழுத்து போடுமாறு மிரட்டி வந்துள்ளனர். இதனால் ராமுத்தாய் சொத்து ஆவணங்கள் அனைத்தையும் மதுரையில் உள்ள முகவரிக்கு மாற்றியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு வந்த பாலமுருகன் மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோர் ராமுத்தாயிடம் துப்பாக்கி முனையில் மிரட்டி கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் ரூ.1000 பவுன் தங்கம், வைர நகைகளை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

இது குறித்து ராமுத்தாய் தல்லாக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இந்த வழக்கு மதுரை மாவட்ட குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பாலமுருகன் என்ற வைகை பாலன் ஓ.பி.எஸ். அணியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக உள்ள இவரது மனைவியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News