உள்ளூர் செய்திகள்

அரசு அலுவலர்களுக்கு கொடுக்க வைத்திருந்த ரூ. 5 லட்சம் பறிமுதல்- அரசு அலுவலகம் போல் செயல்பட்ட தனியார் நிறுவனங்கள்

Published On 2023-03-16 07:00 GMT   |   Update On 2023-03-16 07:00 GMT
  • கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
  • அருகே உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்தின் 2 கிளைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடலூர்:

கடலூர் மாநகராட்சியில் கட்டிட அனுமதி மற்றும் மனைபிரிவுகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெறப்படுவதாக புகார்கள் வந்தது.

இதனை தொடர்ந்து நேற்று மதியம் 3 மணியளவில் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் கூடுதல் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் மற்றும் கடலூர் மாவட்ட ஆய்வு குழு அலுவலர் கீதா ஆகியோர் கடலூர் மாநகராட்சி அலு வலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கடலூர் நகரமைப்பு அலுவலகத்தில் கட்டிட அனுமதி மற்றும் மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதற்கான கோப்புகள் குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அக்கோப்புகள் அனைத்தும் கடலூர் நகர பகுதியில் இயங்கி வரும் 2 தனியார் நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டு அந்நிறுவனங்களால் பரிசீலனையும் செய்யப்பட்டு அங்கேயே அனுமதி அளிக்கப்பட்டு வருவது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தனியார் நிறுவனத்திலும் அதன் அருகே உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்தின் 2 கிளைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் கடலூர் மாநகராட்சி நகரமைப்பு அலுவலகத்திற்கு இணையான அலுவலகம் அந்த நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருவதும், அங்கு 15-க்கும் மேற்பட்டோர் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருவதும், அரசு அலுவலகங்களில் நடைபெற வேண்டிய பணிகள் இந்த நிறுவனங்களில் நடை பெற்று வருவதும் கண்டறியப்பட்டது.

அங்கிருந்த கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வர வேண்டிய பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் கைப்பற்றினார்கள்.

மேலும் இந்த இரு நிறுவனங்களிலும் அரசு அலுவலர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த கமிஷன் தொகை ரூ.5 லட்சமும் கைப்பற்றப்பட்டது.

Tags:    

Similar News