உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல் கூட்டு குடிநீரை பைப் லைன் அமைத்து வீட்டிற்கு பயன்படுத்திய ஊராட்சி துணை தலைவர்- கிராமமக்கள் முற்றுகை

Published On 2024-06-30 07:30 GMT   |   Update On 2024-06-30 07:31 GMT
  • ஆத்திரம் அடைந்த பொது மக்கள் அருப்பு மில் அருகே இருந்த ஊராட்சி மன்ற தலைவரை மக்கள் முற்றுகை இட்டனர்.
  • ஒகேனக்கல் கூட்டு குடிநீரை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு கடந்த 10 நாட்களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் சரியாக வராததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் அகரம் ஊராட்சியின் துணை தலைவர் இரவோடு இரவாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாயிலிருந்து நேரடியாக 2 இன்ச் பைப் அமைத்து தனது வீட்டிற்கு கொண்டு சென்றிருப்பது கிராம மக்களுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி தலைவர் துணை தலைவரின் வீட்டிற்கு சென்ற பைப் லைனை துண்டிப்பு செய்தார். இந்நிலையில் இரவோடு இரவாக மீண்டும் அதே இடத்தில் பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் அகரம் அருப்பு மில் அருகே இருந்த ஊராட்சி மன்ற தலைவரை திடீர் கிராம மக்கள் முற்றுகை இட்டனர்.

அப்போது அங்கு வந்த நாகரசம்பட்டி போலீசார் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, மீண்டும் பைப் லைனை துண்டிப்பு செய்து, ஒகேனக்கல் கூட்டு குடிநீரை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை அடுத்து பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரியிடம் கேட்டபோது, நேற்று முன்தினம் துணை தலைவரிடம் நேரடியாக சென்று, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயிலிருந்து தண்ணீர் எடுப்பது சட்டப்படி குற்றம் என தெரிவித்து எச்சரித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அவர் அதே தவறை செய்துள்ளார். இதே நிலை நீடித்தால் அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News