களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
- பெருமாள் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
- கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளும் நடைபெற்றது.
களக்காடு:
களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு விழா முதல் நாளான இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, பெருமாள் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பெருமாள் ஸ்ரீ பூமி, நீலா தேவியர்களுடன் முன் மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
அதன் பின் கோவில் கொடி மரத்தில் கருடன் படம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடை பெற்றது. முன்னதாக கொடிப் பட்டம் பல்லக்கில் வைக்கப்பட்டு, ரதவீதிகளில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கல்யாணம்
இரவில் தோளுக்கினி யான் வாகனத்தில் எழுந்த ருளி வரதராஜபெருமாள் காட்சி அளிக்கிறார். திருவிழாவை முன்னிட்டு தினசரி பகலில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், இரவில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் திருவீதி உலா வருதலும் நடக்கிறது.
விழாவின் 5-ம் நாளான 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவில் 2 கருட வாகனங்களில் பெருமாளும், வெங்கடாஜல பதியும் உலா வருகின்றனர்.
7-ம் நாளான 2-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாலை 5 மணிக்கு திருக்கல்யாண விழா நடத்தப்படுகிறது. 8-ம் நாளான 3-ந்தேதி (திங்கட்கிழமை) இரவில் பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வருகிறார்.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10-ம் நாளான 5-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 11-ம் நாளான 6-ந் தேதி (வியாழக்கிழமை) தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா மண்டகப்படிதாரர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.