இலங்கை மக்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிதி உதவி- தமிழக அரசிடம் வழங்கினார் ஓ.பன்னீர் செல்வம்
- இலங்கை நாட்டிற்கு அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
- என் குடும்பத்தின் சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தேன்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கூறியுள்ளதாவது:
இலங்கை நாடு ஒரு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், தமிழக அரசின் சார்பில் இலங்கை நாட்டிற்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தபோது, என் குடும்பத்தின் சார்பில் ஐம்பது லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று 29-04-2022 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நான் அறிவித்தேன்.
இதன் அடிப்படையில், புரட்சித் தலைவி அம்மா நினைவாக, எனது மூத்த மகனும், மக்களவை உறுப்பினருமான ப. ரவீந்திரநாத் வங்கிக் கணக்கிலிருந்து இருபத்தைந்து லட்சத்திற்கான வரைவோலை, எனது இளைய மகன் வி. ப. ஜெயபிரதீப் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் இருபத்தைந்து லட்சத்திற்கான வரைவோலை என மொத்தம் ஐம்பது லட்சம் ரூபாய்க்கான வரைவோலைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனைப் பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புகைச் சீட்டினை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.