காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு- விமானத்தில் பறந்து சென்று காஷ்மீரில் திருமணம்
- 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
- விமானம் மூலம் டெல்லி சென்று, ஜம்மு காஷ்மீரில் கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள சந்தைக்கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் தவுலத் மகள் சுமையா பேகம் (வயது 22).
இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கத்தமிழன். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களுடைய காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. இவர்கள் வெவ்வேறு சமூகம் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இவர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 5-ந் தேதி 2 பேரும் வீட்டில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் மூலம் சென்னைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்று, ஜம்மு காஷ்மீரில் கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் 2 பேரும் மணக்கோலத்தில் பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் 2 பேரின் பெற்றோர்களையும் வரவழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.