திண்டுக்கல் - நிலக்கோட்டைக்கு அரசு பஸ் சேவை குறைப்பால் பயணிகள் தவிப்பு
- திண்டுக்கல் - நிலக்கோட்டைக்கு அரசு பஸ் சேவை குறைக்கப்பட்டுள்ளது
- இதனால் கடந்த 2 மாதங்களாக மாணவ, மாணவிகள் உள்பட பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான சிலுக்குவார்பட்டி, விளாம்பட்டி, அணைப்பட்டி, பிள்ளையார்நத்தம், முசுவனூத்து, மைக்கேல்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள், அரசு, தனியார் வேலைக்கு செல்பவர்கள் திண்டுக்கல்லுக்கு அரசு பஸ்சில் சென்று வருகின்றனர். மேலும் பூ மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகள், விவசாயிகள் இந்த அரசு டவுன் பஸ்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக இந்த அரசு பஸ் சேவை வெகுவாக குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் பயணிகள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மாணவ-மாணவிகள் உரிய நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. மேலும் கிராமங்களுக்கு செல்ல நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து அரசு பஸ் வராததால் தனியார் பஸ்களில் செல்லும் நிலை உள்ளது.
கடந்த 2 மாதமாகவே இதே நிலை நீடித்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் போதுமான பஸ் சேவையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.