இடை நில்லா அரசு பஸ்களின் அவலத்தால் பயணிகள் தவிப்பு
- பஸ் வெளித்தோற்றத்தில் புதிய ஆம்னிபஸ் போல காட்சியளித்தாலும் உள்ளே ஏறும் பயணிகளுக்கு அதிர்ச்சியே காத்திருக்கிறது.
- வெகு தூரம் அமர்ந்து செல்லும் இருக்கைகள் சேதம் அடைந்தும் உள்ளிருக்கும் கம்பிகள் ஆபத்தான நிலையில் உள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் கம்பம் அரசு போக்குவரத்து கழக பனிமனையில் இருந்து தினந்ேதாறும் நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை உடைசலான நிலையில் இயக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இருக்கை சேதம்அடைந்தும், கம்பிகள் துரு பிடித்தும் மழை பெய்தால் ஒழுகும் நிலையில் உள்ளது. உள்ளூர் பஸ்கள் என்றால் சில மணி நேரத்தில் பயணிகள் இதனை பொறுத்துக் கொண்டு தங்கள் இடத்திற்கு சென்று விடுவார்கள். ஆனால் ெதாலைதூரங்களுக்கு இயக்கப்படும் பஸ்களும் இதே நிலையில் இருப்பதால் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கம்பத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினந்தோறும் காலை 6.50க்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் வெளித்தோற்றத்தில் புதிய ஆம்னிபஸ் போல காட்சியளித்தாலும் உள்ளே ஏறும் பயணிகளுக்கு அதிர்ச்சியே காத்திருக்கிறது.
வெகு தூரம் அமர்ந்து செல்லும் இருக்கைகள் சேதம் அடைந்தும் உள்ளிருக்கும் கம்பிகள் ஆபத்தான நிலையில் உள்ளது. தூக்கத்தில் அந்த கம்பியில் இடித்தால் பயணிகளின் தலையை இருக்கை பதம் பார்த்து விடும். இதனால் தூங்காமலேயே பயணம் செய்யும் நிலை உள்ளது. தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் இடைநில்லா பஸ்களையாவது தரமான முறையில் பராமரித்து இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.