உள்ளூர் செய்திகள்

டிக்கெட்டு வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயணிகள்.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் டிக்கெட் எடுக்க நீண்டநேரம் காத்திருக்கும் பயணிகள்

Published On 2022-10-15 02:58 GMT   |   Update On 2022-10-15 02:58 GMT
  • எழும்பூர் ரெயில் நிலையத்தில் மட்டுமே தினசரி சுமார் 5 ஆயிரம் மின்சார ரெயில் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.
  • டிக்கெட் கவுண்ட்டர்களில் தற்போது ஒரு டிக்கெட் கவுண்ட்டர் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

சென்னை :

சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்வோர், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்வோர் என பெரும்பாலானோர் மின்சார ரெயில் சேவையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை கடற்கரை-தாம்பரம், கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கமாக வாரநாட்களில் 244 மின்சார ரெயில் சேவைகளும், ஞாயிற்றுக்கிழமைகளில் 96 மின்சார ரெயில் சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த வழித்தடத்தில் முக்கிய ரெயில் நிலையமான எழும்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலுக்கான பயணிகள் கூட்டம் எப்போதும் இருந்து வருகிறது. எழும்பூர் ரெயில் நிலையத்தில் மட்டுமே சராசரியாக தினசரி சுமார் 5 ஆயிரம் மின்சார ரெயில் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. மின்சார ரெயில்களுக்கான டிக்கெட்டுகளை பெற 4 தனி டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த டிக்கெட் கவுண்ட்டர்களில் தற்போது ஒரு டிக்கெட் கவுண்ட்டர் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மற்ற 3 கவுண்ட்டர்கள் பெரும்பாலும் மூடிய நிலையில் தான் இருக்கிறது. எப்போதாவதுதான் 2-வது கவுண்ட்டர் திறக்கப்படுகிறது.

இதனால் நெருக்கடியான நேரங்களில் மின்சார ரெயிலுக்கு டிக்கெட்டு எடுக்க வரும் பயணிகள், ஒரே கவுண்ட்டரில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. வால் போல் நீண்டு நிற்கும் பயணிகளின் வரிசை சில சமயங்களில் டிக்கெட் கவுண்ட்டர் வளாகத்தை விட்டு வெளியே சென்று விடுகிறது.

நீண்ட நேரம் நின்று, டிக்கெட் கவுண்ட்டர் அருகே வந்தும் கூட சில சமயங்களில், பயணிகளுக்கு சில்லரை இல்லை எனக்கூறி டிக்கெட் வழங்காமல் திருப்பி அனுப்பி விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் கால்கடுக்க நிற்கும் பயணிகள் நொந்து விடுகின்றனர். குறிப்பாக டிக்கெட் வழங்கும் நபர்கள், சில்லரைக்காக முகம் சுழிக்கும் வகையில் நடந்துகொள்வது பயணிகளிடையே ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது

என்னதான் கூறினாலும், பயணிகள் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. இது தவிர பண்டிகை காலங்களில் அலைமோதும் கூட்டத்துக்கு, கவுண்ட்டர்களில் நிற்க இடம் ஏது? ஆனால் ரெயில்வே நிர்வாகமோ, கவுண்ட்டர்கள் இருந்தும் அதற்கான வேலையாட்களை நியமிக்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

எனவே காலை மற்றும் மாலையில் அலுவலகங்களுக்கு செல்லும் நேரங்களில் மின்சார ரெயில் டிக்கெட்டுகள் எடுக்க வரும் பயணிகளின் நீண்ட வரிசையை குறைக்க, கூடுதல் கவுண்ட்டர்களை திறந்தால் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் சில்லரை தட்டுப்பாட்டை சுமூகமாக கையாளவும் ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பெரும்பாலான மின்சார ரெயில் பயணிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

Tags:    

Similar News