களக்காடு அருகே சுடுகாட்டு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக பொதுமக்கள் புகார் - கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்
- சுமார் 120 ஆண்டுகளுக்கும் மேலாக பெருமாள்குளம் அருகில் உள்ள கழுத்தறுத்தான் பொத்தை அருகில் உள்ள சுமார் 3 ஏக்கர் நிலத்தை சுடுகாடாக பயன்படுத்தி வருகிறோம்.
- நாராயணன் தலைமையில் வந்த 20-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நாங்குநேரி வட்டம் கல்லடி சிதம்பரபுரம் அருகே உள்ள வேதநாயகபுரத்தை சேர்ந்த ஆதிதிராவிட சமுதாய பொதுமக்கள் ஊர் தலைவர் நாராயணன் தலைமையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சுடுகாட்டு நிலம்
எங்கள் கிராமத்தில் ஆதி திராவிட சமுதாயத்தை சேர்ந்த சுமார் 30 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். சுமார் 120 ஆண்டுகளுக்கும் மேலாக பெருமாள்குளம் அருகில் உள்ள கழுத்தறுத்தான் பொத்தை அருகில் உள்ள சுமார் 3 ஏக்கர் நிலத்தை சுடுகாடாக பயன்படுத்தி வருகிறோம்.
தற்போது இந்த நிலத்தை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் முள்வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே அந்த செயலை உடனடியாக தடுத்து நிறுத்த வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர்.
தர்ணா போராட்டம்
தொடர்ந்து நாராயணன் தலைமையில் வந்த 20-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.