சவுராஷ்டிரா, தமிழ்நாட்டு மக்களிடையே இணைப்பு இருக்கிறது- தஞ்சையில், மந்திரி பேச்சு
- தஞ்சாவூர் மாவட்டத்தில் 75 ஆயிரம் சவுராஷ்டிரர்கள் வசித்து வருகின்றனர்.
- குஜராத்தில் 3-வது வாரத்தில் சவுராஷ்டிர தமிழ் சங்கம நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கம மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ். ராமலிங்கம் தலைமை வகித்தார். பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி, குஜராத் மாநில முத்திரைத்தாள் கண்காணிப்பாளர் ஜெனு தேவன் சிறப்புரையாற்றினர்.
இதில் குஜராத் மாநில நீர் வளம், நீர் வழங்கல், உணவு, குடிமை வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் குன்வர்ஜிபாய் பவாலியா கலந்து கொண்டு பேசியதாவது :-
முகமது கஜினி, அலாவுதீன் கில்ஜி ஆட்சிக் காலத்தில் சவுராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் தமிழ்நாட்டுக்கு புலம்பெயர்ந்து மதுரை, திருச்சி, தஞ்சாவூர் மற்றும் இதர மாநகரங்களில் குடியேறினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 75,000 சவுராஷ்டிரர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மரபுகள், பண்டிகைகளை கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல், குஜராத்தின் சவுராஷ்டிராவில் காணப்படும் சில மரபுகளையும் பின்பற்றி வருகின்றனர்.
இந்திய கலாசாரம், வரலாற்றை இணைப்பதை நோக்கமாகக் கொண்டு குஜராத்தில் மூன்றாவது வாரத்தில் சவுராஷ்டிர தமிழ்ச் சங்கம நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதன் மூலம் சவுராஷ்டிரா, தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிணைந்து கலை, கலாசாரம், கருத்துகள் பரிமாறிக் கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.
கடந்த 4 நூற்றாண்டுகளுக்கும் மேலாக சவுராஷ்டிரா, தமிழ்நாட்டு மக்களிடையே இணைப்பு இருக்கிறது. இதையெல்லாம் நினைவுகூரும் விதமாக இந்த சங்கம நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி கவுன்சிலர் ஜெய்சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கம மத்திய குழு உறுப்பினர் சுரேந்திரன் வரவேற்றார். முடிவில் தஞ்சாவூர் குழு உறுப்பினர் கேசவன் நன்றி கூறினார்.