சின்னமனூர் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
- தீபாவளி நேரத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருவதால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
- மின்ஊழியர்கள் மின்வெட்டை சீரமைத்து தரவேண்டும் என வணிகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னமனூர்:
சின்னமனூர் நகர்பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான வணிகர்கள், தையல் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், சிறுதொழில் செய்பவர்கள் என ஏராளமானோர் உள்ளனர். தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க கடைவீதிக்கு வருகின்றனர். இதனால் வியாபாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருவதால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வணிகர்கள் தங்கள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும் வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொசுக்கடியால் தூக்கத்தை இழந்து அவதியடைந்து வருகின்றனர்.
தினசரி 4 மணிநேரத்திற்கும் மேலாக மின்வெட்டு உள்ளது. இதுகுறித்து முறையான பதில் கிடைக்கவில்லை. எனவே மின்ஊழியர்கள் மின்வெட்டை சீரமைத்து தரவேண்டும் என வணிகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.