உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 4,069 வழக்குகள் பதிவு-மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

Published On 2023-01-03 06:23 GMT   |   Update On 2023-01-03 06:23 GMT
  • பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 4,069 வழக்குகள் பதிவு என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
  • பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்த வழக்கில் 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் காவல் துறையினரின் சீரிய முயற்சி மற்றும் நடவடிக்கையால் குற்றங்கள் மற்றும் ஓரளவிற்கு விபத்துக்கள் தடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேசன் மற்றும் இதர பிரிவு மூலம் மொத்தம் 4 ஆயிரத்து 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக வழிப்பறி, திருட்டு போன்ற வகையில் 286 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 105 வழக்குகள் கண்டுபிடிப்பு குற்றவாளிகளிடமிருந்த நகை, பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.பெண்குழந்தைகள் பாலியல் தொடர்பான 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 549 சாலை விபத்துக்கள் நடந்தது. இதில் 204 இறப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 224 பேர் இறந்துள்ளனர். காயம் ஏற்பட்டதாக 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 723 பேர் காயமடைந்துள்ளனர்.அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்ற வகையில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் 9 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது. குட்கா விற்றதாக 272 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறையை மீறியதாக 2 லட்சத்து 49 ஆயிரத்து 779 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தொடர்பாக 166 வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து குற்ற செயலில் ஈடுப்பட்டு வந்த 42 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்த வழக்கில் 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 128 ரவுடிகளில் 14 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 43 திருந்தி வாழ்ந்து வருகின்றனர். 15 பேர் சிறையில் உள்ளனர். திருந்தி வாழும் பட்டியலில் 6 பேர் உள்ளனர். பல்வேறு காரணங்களால் 379 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மது விலக்கு அமலாக்கப்பிரிவு மூலம் 925 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 922 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News