பெரம்பலூர் மாவட்டத்தில் 'நீட்' தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 63 பேர் தேர்ச்சி
- பெரம்பலூர் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 63 பேர் தேர்ச்சி பெற்றனர்
- பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் முதல் மதிப்பெண் 531 ஆகும்
பெரம்பலூர்,
நடப்பு ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 7-ந் தேதி நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 முடித்தவர்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 122 பேர் 'நீட்' தேர்வினை எழுதினர். அவர்களுக்கு அரசு சார்பில் மாவட்ட கலெக்டர் கற்பகத்தின் நேரிடையான மேற்பார்வையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதேபோல் பெரம்பலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-2 முடித்த 95 பேர் நீட் தேர்வு எழுதினர்.
இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் அரசு பள்ளிகளை சேர்ந்த 5 மாணவர்களும், 18 மாணவிகளும் என மொத்தம் 23 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 2 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மேலும் அதில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கு 3 மாணவர்களுக்கும், 4 மாணவிகளுக்கும் என மொத்தம் 7 பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
இதேபோல் பெரம்பலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-2 முடித்து நீட் தேர்வு எழுதிய 95 பேரில், 40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கு 8 மாணவர்களுக்கும், 9 மாணவிகளுக்கும் என மொத்தம் 17 பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் முதல் மதிப்பெண் 531 ஆகும். அந்த மதிப்பெண்ணை புகழேந்தி என்ற மாணவர் பெற்றார். பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளையும், அதில் அரசு இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளவர்களையும் கலெக்டர் கற்பகம், முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதியதில், 50 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் 5 பேர் அரசு இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் இடம் கிடைத்து டாக்டருக்கு படித்து வருகின்றனர். இந்த ஆண்டு 13 பேர் கூடுதலாக மொத்தம் 63 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவா்களில் 24 பேருக்கு அரசு இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கடந்த 2020-ம் கல்வியாண்டில் 6 பேரும், கடந்த 2021-ம் ஆண்டில் 5 பேரும் அரசு இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் இடம் கிடைத்து டாக்டருக்கு படித்து வருகின்றனர்.