உள்ளூர் செய்திகள்

பெரம்பலூர் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்

Published On 2023-01-07 07:49 GMT   |   Update On 2023-01-07 07:49 GMT
  • பெரம்பலூர் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்பட்டது
  • சப்பரத்தில் நடராஜர்- சிவகாமி அம்பாள் உற்சவ சிலைகள் வைக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து ஆருத்ரா தரிசன திருவீதி உலா நடந்தது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு நடராஜபெருமான்- சிவகாமி அம்பாளுக்கு அபிஷேகமும், மகாதீபாராதனையும் நடந்தது.இதைத்தொடர்ந்து சப்பரத்தில் நடராஜர்- சிவகாமி அம்பாள் உற்சவ சிலைகள் வைக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் ஆருத்ரா தரிசன திருவீதி உலா நடந்தது. ஊர்வலம் மேளதாளத்துடன் சன்னதி தெரு, கடைவீதி, மேற்கு தெரு, வடக்குத் தெரு வழியாக சென்று மீண்டும் ஏகாம்பரேஸ்வரர் கோவிலை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதே போல் பெரம்பலூரில் உள்ள பிரசித்தி பெற்ற அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீசுவரர் கோவிலில் 40-வது ஆண்டு திருவாதிரை திருவிழா தொடங்கி 2 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் முன்னிலையில் கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் நடத்தினார். இதைத்தொடர்ந்து நடராஜ பெருமான்- சிவகாமி அம்பாள் உற்சவ சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஆருத்ரா தரிசன உற்சவமும், மகாதீபாராதனையும் நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து நடராஜபெருமான் மற்றும் சிவகாமி அம்பாள் திருமேனிகள் சப்பரத்தில் வைக்கப்பட்டு, எடத்தெரு, செக்கடித்தெரு, பெரியதெற்குத்தெரு, கடைவீதி வழியாக ஆருத்ரா தரிசன காட்சி, சுவாமி திருவீதி உலா நடந்தது. திருவாதிரை விழாவிற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் நகர சோழிய வேளாளர் சமூகத்தினர் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Tags:    

Similar News