உள்ளூர் செய்திகள் (District)

பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-09-18 08:20 GMT   |   Update On 2023-09-18 08:20 GMT
  • தகாத வார்த்தையால் திட்டிய ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
  • பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே செங்குணம் காலனி தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 46). இவர் செங்குணம் கிராம ஊராட்சியில் செயலாளராக பணி புரிந்து வருகிறார். கோவிந்தன் நேற்று மாலை பெரம்பலூர்-அரியலூர் நெடுஞ்சாலையில் அருமடல் பிரிவு சாலையில் உள்ள மளிகை கடை அருகே மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்ட மளிகை கடையின் உரிமையாளரின் மனைவி கோவிந்தனை வேறு இடத்துக்கு சென்று மது அருந்துமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தன் அந்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் இது குறித்து அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் கூறினார்.

சாலை மறியல் பெண்ணை திட்டிய ஊராட்சி செயலாளர் கோவிந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செங்குணம் கிராம ஊராட்சிக்குட்பட்ட முத்து நகர், முல்லை நகரை சோ்ந்த பொதுமக்கள் பெரம்பலூர்-அரியலூா் நெடுஞ்சாலையில் அருமடல் பிரிவு சாலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இது தொடர்பாக ஊராட்சி செயலாளர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று கூறியதை தொடர்ந்து அவா்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News