உள்ளூர் செய்திகள் (District)

மோசடி செய்த பால் பண்ணை உரிமையாளர் கைது

Published On 2023-09-18 08:23 GMT   |   Update On 2023-09-18 08:23 GMT
  • பெரம்பலூர் அருகே ரூ.25¾ லட்சத்தை மோசடி செய்த பால் பண்ணை உரிமையாளரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
  • பால் பண்ணையையும் பூட்டி விட்டு கிராமத்தை விட்டு தலைமறைவானவர் கைது

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நக்கசேலம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 25). இவர் அதே கிராமத்தில் சுமார் 10 ஆண்டுகளாக அம்மன் என்ற பெயரில் பால்பண்ணை நடத்தி வந்தார். இளங்கோவனிடம் அந்த கிராமத்தை சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் 120 பேர் காலை, மாலை ஆகிய இருவேளைகளில் பால் ஊற்றி வந்தனர். அவர்களுக்கு கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை கொடுக்க வேண்டிய ரூ.25 லட்சத்து 78 ஆயிரத்து 945-ஐ பட்டுவாடா செய்யாமல் இளங்கோவன் ஏமாற்றி வந்தார்.

பின்னர் அவர் கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதி பால் பணத்தை கொடுக்காமல் வசித்து வந்த வீட்டையும், பால் பண்ணையையும் பூட்டி விட்டு கிராமத்தை விட்டு தலைமறைவானார். இளங்கோவன் மீது நடவடிக்கை எடுத்து தர வேண்டிய பால் பணத்தை பெற்று தருமாறு பால் உற்பத்தியாளர்கள் பாடாலூர் போலீஸ் நிலையத்தில், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தனர். சிறையில் அடைப்பு இதையடுத்து பாடாலூர் போலீசார் கடந்த 15-ந்தேதி இளங்கோவன் மீது பணம் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தலைமறைவான இளங்கோவனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின் படி, பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி வழிக்காட்டுதலின் பேரில், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா, கோபாலபுரம் கிராமத்தில் தலைமறைவாகி இருந்த இளங்கோவனை தனிப்படை போலீசார் பிடித்து பெரம்பலூருக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் அவரை கைது செய்து திருச்சி மாவட்டம், துறையூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News