- கோவில்பாளையத்தில் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் தேனூர் கோவில்பாளையம் கிராமத்தில் சக்தி சித்தி விநாயகர், சுப்பிரமணியர், நல்ல சேவகர் அய்யனார், செம்மலயபர், ஆகாச கருப்பு, கருப்புசாமி, மதுரை வீரன், காரடையான் சங்கிலி கருப்பு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கோபுரங்கள் கட்டப்பட்டு கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 10-ந் தேதி விநாயகர் பூஜை, அனுக்ஞை, வாஸ்து சாந்தியுடன் தொடங்கி முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.இரண்டாம் நாள் விநாயகர் பூஜை, வருண பூஜை , அஷ்டபந்தனம் பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளோடு இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று காலை விநாயகர் பூஜை, திராவிய குதி மற்றும் தீபாரதனையுடன் யாகசாலை பூஜை நிறைவு பெற்றது. பிறகு பூர்ணாகுதியும் நடைபெற்றது.மேலும் மங்கள வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளம் முழங்க யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதனையடுத்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கோபுர விமானத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து மூலவர் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் துங்கபுரம், புது வேட்டக்குடி, காரைப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.