தி.மு.க.வினரால் எங்கள் உயிருக்கு ஆபத்து- பாதிக்கப்பட்ட பா.ஜ.க.வினர் பெரம்பலூர் போலீசில் புகார்
- கல் குவாரிகளுக்கான ஏலத்தின்போது பங்கேற்க வந்த பா.ஜ.க. கவுல்பாளையம் ஊராட்சி தலைவர் கலைசெல்வன் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
- நடவடிக்கை எடுத்து எங்களது உயிரும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும்.
பெரம்பலூர
பெரம்பலூரில் கடந்த திங்கட்கிழமை நடந்த 31 கல் குவாரிகளுக்கான ஏலத்தின்போது அதில் பங்கேற்க வந்த பா.ஜ.க. கவுல்பாளையம் ஊராட்சி தலைவர் கலைசெல்வன், அதை தடுக்க வந்த போலீசார், அரசு ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தி.மு.க.வினர் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கவுல்பாளையம் ஊராட்சி தலைவர் கலைசெல்வன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் 30-ந்தேதி நடந்த கல் குவாரிகளுக்கான மறைமுக ஏலத்திற்கான ஒப்பந்தம் கோரி விலைபுள்ளி அளிக்க சென்ற என்னையும், எனது தம்பி முருகேசன், தொழில்துறை பிரிவு மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியோரை தி.மு.க.வினர் தடுத்தனர். பின்னர் அலுவலகத்திற்குள் புகுந்து எங்களிடமிருந்த ஒப்பந்த படிவத்தை பிடிங்கி கிழித்து எறிந்து சாதி பெயரை கூறி தகாத வார்த்தையால் திட்டி அரை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கினர்.
இதனால் நாங்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். மேலும் தி.மு.க.வினர் எங்களது வீட்டுகளுக்கு வந்து தேடி வருகின்றனர். இதனால் நாங்கள் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறோம். தி.மு.க.வினர் எங்களை கொலை செய்யும் நோக்குடன் தொடர்ந்து எங்களை தேடிவருகின்றனர்.
எனவே எங்களை தாக்கியவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்து எங்களது உயிரும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.