வீண் வதந்திகளை நம்பாதீர்கள் - கலெக்டர் கற்பகம்
- பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த வீண் வதந்திகளை நம்பாதீர்கள் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்
- வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரம்பலூர்,
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் தமிழக அரசு வழங்கவுள்ளது. இதனால் இத்திட்டத்திற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு அவர்களின் குடும்ப அட்டை பதிவு செய்துள்ள ரேஷன் கடை பணியாளர் மூலம் வீடு வீடாக விண்ணப்பங்களை வழங்கிடவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திரும்ப பெறவும் சிறப்பு முகாம்கள் நடத்திடவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 282 ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்த உகந்ததாக உள்ள சமுதாயக் கூடங்கள், அரசு பள்ளி கட்டிடங்கள், அரங்குகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கோனேரிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே முகாம் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறும்டபோது, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்பாதீர்கள். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.