உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் பல பயிர் சாகுபடி செய்ய ஆலோசனை

Published On 2023-05-04 08:27 GMT   |   Update On 2023-05-04 08:27 GMT
  • விவசாயிகள் பல பயிர் சாகுபடி செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது.
  • மண்வளம் பெருக்க

பெரம்பலூர்:

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட விவசாயிகள் மண் வளம் காக்க பல பயிர் சாகுபடி செய்யலாம் என வேளாண் துறை விவசாயிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளது.

இது குறித்து பெரம்பலூர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் தெய்வீகன் தெரிவித்துள்ளதாவது,

பல பயிர் சாகுபடி என்பது ஒரே வயலில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயிர்களை ஒன்றாக விதைத்து அவை பூக்கும் பருவத்தில் மடக்கி உழுவதன் மூலம் மண்ணின் வளத்தை பெருக்குவதாகும். பொதுவாக தானியங்களில் 2 வகை, எண்ணெய் வகை வித்துக்களில் 2 வகை, பயறு வகைகளில் 2 வகை, பசுந்தாள் ஒரு வகை என ஒவ்வொன்றும் ஒரு கிலோ வீதம் 7 கிலோ ஒரு ஏக்கருக்கு போதுமானது.

கோடையின் இறுதியில் பருவப்பயிருக்கு முந்தைய காலத்தில் கிடைக்க பெறும் இடைக்காலத்தில் பசுந்தழை பயிர்களோ பல பயிர்களோ பயிரிட்டு அவற்றை மடக்கி உழுது அடுத்த பயிருக்கு உரமாக்குவது அங்கக வேளாண்மையின் சிறந்த ஒரு தொழில்நுட்பம் ஆகும். பல ஆண்டுகளாக செயற்கை உரம் மற்றும் பூச்சிகொல்லி பயன்பாட்டில் வளம் இழந்துள்ள மண்ணின் வளத்தை மீட்டெடுக்கவும் இயற்கை விவசாயத்தை துவக்குவதற்கும் விவசாயிகள் முதலில் மேற்கொள்ள வேண்டிய பல பயிர் விதைப்பு நடவடிக்கையாகும்.

இம்முறையில் தானிய வகை பயிர்களான சோளம் ஒரு கிலோ, கம்பு அரை கிலோ, தினை, சாமை தலா 250 கிராம், உளுந்து, பாசிசப்பயறு, தட்டைப்பயறு, கொண்டைக்கடலை ஆகியவை தலா ஒரு கிலோ எண்ணெய் வித்து பயிர;களான நிலக்கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு தலா 2 கிலோ, எள் 500 கிராம், பசுந்தாள் பயிர்களான தக்கைப்பூண்டு, சணப்பை தலா 2 கிலோ ஆகியவற்றை ஒரே நிலத்தில் விதைக்க வேண்டும். இந்த விதைகளை குறிப்பிட்ட அளவு பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயமில்லை. நிலத்தின் பரப்பு கிடைக்கும் விதைகளை பொறுத்து விதைக்கலாம்.

விதைகள் வளர்ந்து 45-50 நாட்களாகி பூத்த பின்பு செடிகளை மடக்கி உழவு செய்ய வேண்டும். இதன் மூலம் மண்ணில் நுண்ணுயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் ஊட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டசத்து இயற்கையாகவே கிடைத்திட இது வழி செய்கிறது. பல ஆண்டுகளாக பயன்படுத்திய செயற்கை உரம், பூச்சிகொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை குறைவதோடு மண்ணின் கரிமச்சத்து அளவு அதிகரிக்கிறது. பல தானிய பயிர்களை மடக்கி உழுத பிறகு இயற்கை உரங்களான சாணம், கோமியம், பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் போன்றவற்றை பயன்படுத்தி இயற்கை விவசாயம் துவங்க ஏதுவாகும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News