உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை வாட்ஸ் அப்பில் தெரிவிக்க நுகர்வோருக்கு அழைப்பு
- உணவு பொருட்கள் தொடர்பான புகார்களை வாட்ஸ் அப்பில் தெரிவிக்க நுகர்வோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- பெரம்பலூரில் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
பெரம்பலூர்:
பெரம்பலூரில் உணவு பொருள் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு உணவு பாதுகாப்பு துறை பெரம்பலூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கவிக்குமார் தலைமை வகித்து பேசினார்.
அப்போது அவர் கூறும் போது, பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் கார வகைகள் மற்றும் பேக்கரி தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006, அதன் விதிமுறைகள் 2011-ன்படி கண்டிப்பாக உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு பெற்றிருக்க வேண்டும். தரமான மூலப்பொருட்களை தெரிந்த உணவு வணிகர்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும். அதற்கான முறையான ரசீது பெறப்பட்டிருக்க வேண்டும்.
சுகாதாரமான முறையில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கப்பட வேண்டும். உணவு தயாரிக்கும் இடத்திற்குள் பூச்சிகள் நுழையாவண்ணம் பூச்சி கட்டுப்பாடு முறைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். பணியின்போது பணியாளர்கள் கையுறை, தலைக்கவசம், மேலங்கி அணிந்தே பணியாற்ற வேண்டும். உணவு தயாரிப்பில் அனுமதித்த அளவிற்குள் மட்டுமே செயற்கை வண்ணங்களை பயன்படுத்த வேண்டும்.
நுகர்வோர்கள் உணவு பொருள் தொடர்பான புகார் ஏதேனும் இருந்தால் 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இனிப்பு மற்றும் கார வகைகள், பேக்கரி தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உரிய வழிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். தவறுபவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கூட்டத்தில் பேக்கரி தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.