உள்ளூர் செய்திகள்

அரியலூர்-பெரம்பலூர் சாலையில் குப்பைகளை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2023-06-07 06:16 GMT   |   Update On 2023-06-07 06:21 GMT
  • அரியலூர்-பெரம்பலூர் சாலையில் குப்பைகளை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.
  • சாலையில் குப்பைகளை எரிப்பதை தடை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பெரம்பலூர்:

அரியலூர்-பெரம்பலூர் சாலையின் மத்தியில் குன்னம் சட்டமன்ற தொகுதி அமைந்துள்ளது. வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னம் ஊராட்சியில் சேகரமாகும் குப்பைகள் அரியலூர்- பெரம்பலூர் சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டு தினமும் மாலை எரியூட்டப்படுகிறது. இங்கிருந்து வெளியேறும் புகையால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். குப்பைகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுவதோடு இதனை சுவாசிக்கும் பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது.

மேலும் மக்காத குப்பைகளை மக்கும் குப்பைகளோடு சேர்த்து கொட்டி எரிப்பதனால் மக்கும் குப்பைகளும் வீணாகிறது. நிலமும், காற்றும் மாசடைகிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி குப்பைகளை முறையாக பெற்று மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதோடு மக்காத குப்பைகளை முறையாக கையாள குன்னம் ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர்-பெரம்பலூர் சாலையில் குப்பைகளை எரிப்பதை தடை செய்ய வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News