உள்ளூர் செய்திகள்

குட்கா, புகையிலை பொருட்கள் விற்ற டீக்கடைக்கு சீல்

Published On 2022-07-07 09:43 GMT   |   Update On 2022-07-07 09:43 GMT
  • குட்கா,புகையிலை பொருட்கள் விற்ற டீக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
  • தண்டனைக்குரிய குற்றமாகும்

பெரம்பலூர் :

பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட தண்ணீர் பந்தல் பகுதியில் தேவேந்திரன் என்பவர் டீக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு புகார் எழுந்தது. இதன்பேரில் பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அந்த டீக்கடைக்கு சென்று ஆய்வு செய்தபோது குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்ததையடுத்து அப்பொருட்களை பறிமுதல் செய்து ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இந்நிலையில் மீண்டும் தொடர்ந்து தேவேந்திரன் டீக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதையறிந்த பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கவிக்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சின்னமுத்து, இளங்கோவன், ரவி ஆகியோர் தேவேந்திர டீக்கடைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடையினுள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 750 கிராம் இருந்தது தெரியவந்ததையடுத்து அவற்றை பறிமுதல் செய்து டீக்கடைக்கு சீல் வைத்தனர்.

பின்னர் மாவட்ட நியமன அலுவலர் கவிக்குமா கூறுகையில், தேவேந்திரன் என்பவரது டீக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான்மசாலா பொருட்கள் விற்பனைக்கு இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுந்த அந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கடைக்கு உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் எண்ணை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இக்கடையில் வணிகம் செய்வது உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின் படி சட்ட விரோதமானதாகும். இந்த அறிவிப்பாணையே அல்லது பூட்டின் மீதுள்ள அரக்கு சீலையோ அகற்றுவது உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News