உள்ளூர் செய்திகள் (District)

மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-22 08:39 GMT   |   Update On 2022-07-22 08:39 GMT
  • மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நடந்தது

பெரம்பலூர்:

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி கேட்டு பெரம்பலூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் கலையரசி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் தாலுகா, கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, பள்ளியை அரசுடைமையாக்க வேண்டும். இந்த சம்பவத்தில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த பள்ளி மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளில் தொடரும் மாணவர்களின் மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்."

Tags:    

Similar News