உள்ளூர் செய்திகள்

கனிம வளத்துறை அதிகாரிகள் திடீர் மாற்றம்

Published On 2023-11-14 06:23 GMT   |   Update On 2023-11-14 06:23 GMT
  • கல்குவாரி ஏலத்தில் மோதல் எதிரொலியாக கனிம வளத்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்
  • மற்றொரு அதிகாரி நீண்டநாள் விடுப்பு எடுத்து சென்றார்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 31 குல்குவாரிகள் ஏலம் விடுவதற்கான டெண்டர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கதுறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி நடந்தது. அப்போது டெண்டர் கோரி விண்ணப்பிக்க வந்த பா.ஜ.க.வினரையும், அரசுத்துறை அதிகாரிகளையும், காவல்துறையினரும் தி.மு.க.வினர் தாக்கியதோடு, அலுவலக பொருட்களையும் அடித்து நொறுக்கி சேதமாக்கினர். இதனால் கல்குவாரி டெண்டரை ரத்து செய்து கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார்.

இது குறித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் (பொ) ஜெயபால் பெரம்பலூர் போலீசில் புகார் அளித்ததன்பேரில் 20-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குபதிந்து 13 பேரை கைது செய்தனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

கல்குவாரி டெண்டர் விசயத்தில் அரசு அலுவலர்கள் பா.ஜ.க.வினருக்கு ஆதராக செயல்பட்டனர் என தி.மு.க.வினர் கூறி வந்த நிலையில் வன்முறை சம்பவத்தின் எதிரொலியாக கனிம வளத்துறை அதிகாரிகள் திடீரென கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டு உள்ளள்ளனர். கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் ஜெயபால் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பில் இருந்து திடீரென விடுவிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை இனை இயக்குநர் சரவணன் பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குனர் பொறுப்பையும் சேர்ந்து கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றிய தற்காவிக ஊழியர்களை தவிர அனைத்து அலுவலர்களும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய குமரிஅனந்தன் குன்னம் தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும், அவருக்கு பதிலாக அங்கு குன்னம் தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய நாராயணசாமி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கும், துணை தாசில்தார் மணிமேகலை கலெக்டர் அலுவலச சம்பள பிரிவு துணை தாசில்தாராகவும், அவருக்கு பதிலாக நில எடுப்பு பிரிவு துணை தாசில்தார் சீனிவாசன் பெரம்பலூருக்கும் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மோதல் சம்பவத்தின்போது தாக்கப்பட்ட உதவி புவியியலாளர் இளங்கோவன் மனஉளைச்சல் அடைந்து நீண்ட நாள் விடுப்பில் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூருக்கு உதவி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள சரவணன் ஏற்கனவே பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் துணை இயக்குநராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றிள்ளார்.

பதவி உயர்வு பெற்று 7 மாவட்டங்களை உள்ளடக்கிய புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குநராக திருச்சியில் பணிபுரிந்து வருகிறார். தற்போது சரவணணை கூடுதல் பொறுப்பாக பெரம்பலூருக்கு நியமித்து சென்னை கனிம வள துறை ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. சரவணன் பெரம்பலூர் மாவட்டம், லாடபுரத்தை சேர்ந்தவர் என்பதும், முன்னாள் அமைச்சர் ராஜாவின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News