- விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
- மகளை அழைத்து வருவதற்காக சென்றார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மாக்காயிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 47). விவசாயி. இவரது மகள் துர்கா நேற்று சென்னையில் இருந்து ரெயிலில் அரியலூருக்கு வந்தார். அவரை ஊருக்கு அழைத்து வருவதற்காக நேற்று மாலை மாக்காயிகுளத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் அரியலூர் ெரயில் நிலையம் நோக்கி ராமச்சந்திரன் சென்று கொண்டிருந்தார்.
ராமலிங்கபுரம் காட்டுப்பகுதியில் சென்றபோது அவரை பின் தொடர்ந்து வந்தவர்கள் மற்றும் அப்பகுதியில் மறைந்திருந்தவர்கள் என மொத்தம் 7 பேர் கொண்ட கும்பல் திடீெரன வந்து, மோட்டார் சைக்கிள் மூலம் ராமச்சந்திரன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதினர்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை, சாலையோர பள்ளத்தில் தள்ளி இரும்பு ஆயுதங்களால் தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ராமச்சந்திரனின் மனைவி லலிதா கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாண்டியன், மதியழகன், மங்களமேடு துணை சூப்பிரண்டு ஜனனிபிரியா, குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, ராமச்சந்திரனின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் ராமச்சந்திரனின் உடலை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.