உள்ளூர் செய்திகள் (District)

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

Published On 2023-09-13 08:12 GMT   |   Update On 2023-09-13 08:12 GMT
  • அகரம்சீகூரில் செல்போன் கடை உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
  • ரூ.2500 லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார்

அகரம்சீகூர்,

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் திட்டக்குடியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில் இவரது தந்தை முத்துராமலிங்கத்திற்கு சொந்தமான நிலம் பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூரில் உள்ளது. அந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்வதற்காக ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தார்.இதையடுத்து அதற்கான சான்றில் கையெழுத்து பெறுவது தொடர்பாக அகரம்சீகூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் (வயது 29) ராமகிருஷ்ணன் அணுகியுள்ளார். அப்போது அதற்கு பிரகாஷ் ரூ.2,500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமகிருஷ்ணன் இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷை கையும், களவுமாக பிடித்து கைது செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.போலீசாரின் அறிவுறுத்தலின்படி நேற்று மதியம் அகரம்சீகூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்த ராமகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷிடம் ரூ.2,500-ஐ கொடுத்தார். அதனை பிரகாஷ் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பிரகாஷை பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News