உள்ளூர் செய்திகள் (District)

புவியியல் ஆய்வு மையத்தின் கிளை அமைக்கப்படுமா?

Published On 2023-09-23 06:32 GMT   |   Update On 2023-09-23 06:32 GMT
  • பெரம்பலூரில் புதை படிவங்களை பாதுகாக்க புவியியல் ஆய்வு மையத்தின் கிளை அமைக்கப்பட வேண்டும் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை
  • கோரிக்கையை மாநில அரசிடம் எடுத்துச் செல்வேன் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்

பெரம்பலூர்,

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீருக்கு அடியில் இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே இந்த மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட புதை படிவ எச்சங்கள் முன்பு ஏற்பட்ட புவியியல் மாற்றத்தை குறிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். மேலும் மனிதர்களுக்கு முந்தைய கடல்வாழ் உயிரினங்களின் இருப்பையும் உறுதி செய்துள்ளனர். 1940 -ல் புவியியலாளர் எம்.எஸ். கிருஷ்ணன் இங்கு 12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய மரத்தின் படிமத்தை கண்டுபிடித்தார். அந்த இடம் சாத்தனூர் ஆகும்.

மேலும் தொன்மையான வரலாற்றை கண்டுபிடிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வறண்ட நிலங்களில் மறைந்து கிடக்கும் செல்வத்தை கொண்டு வர ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என வரலாற்று ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆகவே பெரம்பலூரில் இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் கிளை அலுவலகத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெரம்பலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் வாசன் கூறும்போது,

இங்கு கிடைத்த புதை படிவங்கள் இரு மாவட்டங்களும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. புதை படிவங்கள் நிறைந்த மாவட்டங்களின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை வெளியே கொண்டு வருவதற்கு இங்கு ஒரு பிரத்யேக புவியியல் ஆய்வு மையம் நிறுவப்பட வேண்டும் பல இடங்களில் புகை படிமங்கள் காணப்பட்டாலும் அவை முறையாக பாதுகாக்கப் படவில்லை. இங்கு அலுவலகம் தொடங்கப்பட்டால் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் புவியியல் ஆய்வு மையத்துக்குமான இடைவெளி குறையும் என்றார். விக்ரம் என்பவர் கூறும் போது,

வரலாற்று சிறப்புமிக்க கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க காரை கிராமத்தில் புவிசார் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்து அதன் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே புவியியல் ஆய்வு மையமும் அமைந்தால் நன்றாக இருக்கும். புதை படிவங்கள் ஓடைகளிலும் பிற இடங்களிலும் கிடப்பதை எளிதாக காணலாம் என்றார். மாவட்ட கலெக்டர் தரப்பில் கேட்டபோது, இங்கு புவியியல் ஆய்வு மைய கிளை அலுவலகம் இருந்தால் உதவியாக இருக்கும் இந்த கோரிக்கையை மாநில அரசிடம் எடுத்துச் செல்வேன் என்றார்.

Tags:    

Similar News