வழிபறியில் ஈடுபட்ட யவாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை
- சங்கிலி பறிப்பு வழக்கில் வாலிபருக்கு பெரம்பலூர் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது
- மேலும் ரூ.1,000 அபராதமும் விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2 நீதிபதி சங்கீதாசேகர் உத்தரவு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இலுப்பைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராணி. இவர் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சியை சோ்ந்த செந்தில்வேலின் மகன் புரட்சிதமிழன் (வயது 25) என்பவர் ராணியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புரட்சி தமிழனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2-ல் நடந்து கொண்டிருந்தது. நீதிமன்ற விசாரணையில் இருந்த மேற்படி வழக்கானது விசாரணை முடிக்கப்பட்டு நேற்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால் புரட்சி தமிழனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2 நீதிபதி சங்கீதாசேகர் உத்தரவிட்டார். மேற்படி சங்கிலி பறிப்பு வழக்கில் சிறப்பாக செயல்பட்ட பாடாலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் கோர்ட்டு போலீஸ் முத்தையன் ஆகியோருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டு தெரிவித்தார்.