பெரியகுளம் கவுமாரியம்மன் கோவிலில் ஆனி பெருந்திருவிழா சாட்டுதல்
- பெரியகுளத்தில் கவுமாரியம்மன்கோவிலில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கம்பம் நடுதல் மற்றும் சாட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.
- வருகின்ற 27-ம் தேதி மறுபூஜை விழாவினை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து திருவிழா நிறைவு பெரும்.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் பெரியகுளம் வராக நதியின் தென்கரையில் கவுமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.
பெரியகுளத்தின் கிராம கோவிலாக கருதப்படும் இந்த கோவிலில் வருடம் தோறும் ஆனி மாதத்தில் ஆனிப் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவினை முன்னிட்டு கம்பம் நடுதல் மற்றும் சாட்டுதல் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
பெரியகுளம் வடகரையில் உள்ள பூசாரியின் வீட்டிலிருந்து கம்பம் முளைப்பாரிகள் ஊர்வலத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கவுமாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. பின்னர் கம்பத்திற்கு பால், தயிர், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் போன்ற அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்த பின் கம்பம் நடுதல் விழா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து திருவிழா சாட்டுதழ் நிகழ்வும் நடைபெற்றது. இந்த சாட்டுதலுக்கு பின்னர் வருகின்ற 11-ம் தேதி கோவிலில் கொடியேற்றம், அதனை தொடர்ந்து அன்றிலிருந்து சாமி சிம்ம வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட வானங்கள் மூலம் திருவீதி உலா வரும். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகின்ற 19-ம் தேதி பக்தர்கள் தீச்சட்டி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
வருகின்ற 27-ம் தேதி மறுபூஜை விழாவினை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து திருவிழா நிறைவு பெரும். கம்பம் நடுதல் மற்றும் சாட்டுதல் நிகழ்வினை முன்னிட்டு பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் நரசிம்மன் சிறப்பாக செய்திருந்தார்.