உள்ளூர் செய்திகள்

இலத்தூரில் ஜல்லிகள் பெயர்ந்தும்-தெருவிளக்குகள் இன்றியும் காணப்படும் பெரியகுளம் சாலை

Published On 2023-10-15 08:59 GMT   |   Update On 2023-10-15 08:59 GMT
  • விவசாயிகள், மாணவ- மாணவிகள் இந்த வழிதடத்தில் அதிக அளவில் பயணித்து வருகின்றனர்.
  • தெரு விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

செங்கோட்டை:

செங்கோட்டை தாலுக்கா விற்குட்பட்ட பெரியகுளம் 210 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்தின் மூலம் 600 ஏக்கர் நேரடி பாசன வசதி பெற்று கார், பிசான, பூமகசூல் என 3 சாகுபடிக்கும் இந்த குளத்தின் தண்ணீரை பெற்று மட்டுமே விவசாயிகள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

இந்த குளத்து கரையின் வழியாக கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலையில் குளத்து கரை மட்டுமே ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்டது. தென்காசியில் இருந்து இலத்தூர், திருவெட்டியூர், நெடுவயல், அச்சன்புதூர், வடகரை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

விவசாயிகள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வழிதடத்தில் அதிக அளவில் பயணித்து வருகின்றனர். அவ்வாறு வரும் வாகனங்கள் முழுவதும் இலத்தூர் குளத்துகரை வழியாகத் தான் வந்து செல்ல முடியும். ஏற்கனவே இலத்தூர் குளம் முதல் அச்சன்புதூர் வரையிலான வழி தடங்களில் தெருவிளக்குகள் இல்லாத நிலையில் இரவு நேரங்களில் அதிகளவில் பாம்பு மற்றும் தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் செல்வோர் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் இலத்தூர் குளத்து கரையை ஒட்டிய சாலையை விரிவுபடுத்தி தார்ச்சாலை அமைத்து கொடுத்துள்ளனர். தற்போது அந்த சாலையின் மைய பகுதியில் மேடு-பள்ளங்கள் காணப்படுகிறது. மேலும் ஜல்லிகள் பெயர்ந்தும் உள்ளது. சாலைகள் சேதம் மற்றும் தெரு விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இலத்தூர் கரையிலிருந்து அச்சன்புதூர் வரையிலான சாலையில் மின் விளக்கு அமைப்பதுடன், சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News