உள்ளூர் செய்திகள்

8 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட பெருமாள் கோவில்

Published On 2024-06-20 06:35 GMT   |   Update On 2024-06-20 06:35 GMT
  • கடந்த 2016-ம் ஆண்டு பெருமாள் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
  • பக்தர்கள் ஏராளமானோர் திரண்டு நெகழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

தாடிக்கொம்பு:

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பேரூராட்சிக்குட்பட்ட டி.அய்யம்பாளையத்தில் விநாயகர், காளியம்மன், பகவதியம்மன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களின் நகைப்பெட்டி ஒரு தரப்பினருக்கு சொந்தமான பெருமாள் கோவிலில் வைத்து வந்தனர்.

இந்த பெருமாள் கோவில் உரிமை சம்மந்தமாக கடந்த 2012-ம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் கடந்த 2016-ம் ஆண்டு பெருமாள் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

கடந்த 8 ஆண்டுகளாக கோவில் திறக்கப்படாததால் பக்தர்கள் வேதனையடைந்தனர். தற்போது திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் பெருமாள் கோவில் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு பாத்தியப்பட்டது என்றும் நகைபெட்டியை வைத்து பாதுகாக்கவும், பராமரிக்கவும் திருவிழா காலங்களில் எடுத்து சென்று வழிபடவும் அவர்களுக்கு மட்டும் உரிமை உண்டு என முடிவானது. இதனை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.

இதனால் கடந்த 8 ஆண்டுகளாக திறக்கப்படாத கோவிலை திறப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி தாசில்தார் வில்சன் தேவதாஸ் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டது. அதன் பின்னர் கோவில் திறக்கப்பட்டதால் பக்தர்கள் ஏராளமானோர் திரண்டு நெகழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News