விக்கிரவாண்டியில் பரபரப்பு கட்டண உயர்வை கண்டித்து சுங்கச்சாவடியில் மறியல்
- ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது
- தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 60 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சா வடிகளில் வசூலிக்கப்படும் கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு வந்தது. இதனை கண்டித்தும், சுங்கச்சா வடிகளில் நடைபெறும் ஊழல்களை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, விக்கி ரவாண்டி சுங்கச்சாவடியை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் முற்றுகையிட்டு இன்று காலை 11.30 மணிக்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமையில் நடந்த போராட்டத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வாகனங்கள் செல்லும் பாதையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினரை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அவர்கள் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், விக்கிரவாண்டியில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் அடைத்து வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் திடீர் பரபரப்பு நிலவியது.