காரைக்கால் பழைய பஸ்நிலையத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்த திட்டம் கொண்டுவர வேண்டும்: மக்கள் நலக்கழகம் கலெக்டரிடம் கோரிக்கை
- முதற்கட்டமாக ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிந்தோம்.
- 3 திட்டங்களும் மிக அவசியமான ஒன்றாகும்.
புதுச்சேரி:
காரைக்கால் மக்கள் நலக்கழகம் செயலாளர் பக்கிரி சாமி, இது குறித்து, மாவட்ட கலெக்டர் குலோத்துங்க னுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற 'ஸ்வதேஷ் தர்ஷன்' ஆலோசனை க்கூட்டத்தில், காரைக்கால் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இத்திட்டத்தில், முதற்கட்டமாக ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிந்தோம்.
குறிப்பாக இத்திட்ட த்தில் காரைக்கால் வணிகம் பெருகுவதற்கும், காரைக்கால் நகரில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு வெளியூர் மக்கள் எளிதில் வந்து செல்வதற்கு வசதியாக, வாகன நிறுத்துமிடம் அமைப்பது குறித்தும், காரைக்கால் நகரப்பகுதியில் கழிப்பிடம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பது குறித்தும் குறிப்பிடப்படவில்லை. மேற்கண்ட 3 திட்டங்களும் மிக அவசியமான ஒன்றாகும். குறிப்பாக, காரைக்கால் நகர் பகுதிக்கு வரும் பலர், தங்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல், மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பலர், மக்கள் நடமாடும் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி செல்வதால், போக்கு வரத்துக்கு இடையூறும், விபத்துகளும் ஏற்படுகின்றது. இதை தவிர்க்க, காரைக்கால் பழைய பஸ் நிலையம் பகுதி, கடந்த பல ஆண்டுகளாக உபயோகம் இன்றி இருப்பதால், அங்கு அடுக்குமாடி வாகன நிறுத்தம் இத்திட்டத்தின் கீழ் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுபோல், காரைக்கால் நகரப்பகுதியில் கழிப்பிடம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.