விளையாடுவதே உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும் - நீதிபதி பேச்சு
- பொது ஒழுக்கத்தைக் கடை பிடிப்பதன் மூலம் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையமுடியும்.
- உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வடிவேல் முன்னிலை வகித்தனர்.
பல்லடம் :
பல்லடம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ப்ளூபேர்ட் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தானகிருஷ்ணசாமி தலைமை வகித்தார். குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சித்ரா, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தாளாளர் ராமசாமி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி பேசுகையில்,போதை பொருட்களால் உடல் நலம், மனநலம் கெடுவதுடன், சமூக மரியாதையும் குறையும்.வாழ்க்கை முழுதும் பாதிக்கப்படும்.பொது ஒழுக்கத்தைக் கடை பிடிப்பதன் மூலம் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையமுடியும்.
மாணவர்களின் லட்சியம் கல்வியில் மட்டும் இருந்தால் சிறந்த பதவிகளுக்கு வர முடியும். உங்களது பெற்றோர்கள், உறவினர்கள் போதை பழக்கத்தில் இருந்தால், அவர்களை அந்த பழக்கத்தில் இருந்து விடுவிக்க முடியும். மேலும் போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து உங்களுக்குத் தெரிந்தால், பெற்றோர்கள் மூலம் காவல்துறைக்கு தெரிவிக்கலாம்.
மேலும் செல்போன், வீடியோ கேம் போன்ற எலக்ட்ரானிக் விளையாட்டுகளில் ஈடுபடுவதை தவிர்த்து, ஓடியாடி விளையாடுவதே உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில்,வழக்கறிஞர்கள், பள்ளி முதல்வர் ஹேமலதா மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.