உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சரின் வெளிநாடு சுற்றுப்பயணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது-விஜயகாந்த் மகன் பேட்டி

Published On 2023-05-24 08:52 GMT   |   Update On 2023-05-24 08:52 GMT
  • கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் போய்விட்டது. கள்ளச்சாராயம் காய்ச்சிவருக்கே நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
  • என்ன நடக்கிறது என்பதே முதல்-அமைச்சருக்கு தெரியவில்லை.

தருமபுரி,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தருமபுரியில் நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றுள்ளார்.

ஏற்கனவே துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று எந்த முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தார் என்று தெரியவில்லை. அவரது வெளிநாடு சுற்றுப்பயணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

2000 ரூபாய் நோட்டுகள் வருகிற செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை வங்கிகளில் செலுத்தி மற்ற மதிப்பீட்டு நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்படவில்லை. இது கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாகவே நாங்கள் கருதுகிறோம். எனவே அதை நாங்கள் வரவேற்கிறோம். தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.

கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் போய்விட்டது. கள்ளச்சாராயம் காய்ச்சிவருக்கே நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது என்பதே முதல்-அமைச்சருக்கு தெரியவில்லை.

எனக்கு நேரமே இல்லை என்று முதல்-அமைச்சர் கூறுகிறார். ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் பார்ப்பதற்கு 6 மணி நேரம் செலவிடுகிறார். கடந்த 2 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எதையும் செய்யவில்லை.

நீட் தேர்வு, நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.

மொத்தத்தில் இந்த அரசு போட்டோ சூட் ஆட்சியாகவே இருக்கிறது. மக்களுக்காகவே தொடங்கப்பட்ட கட்சி தே.மு.தி.க. ஆனால் மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை. பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்து விட்டார்கள். இதனால் எங்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. மக்களுக்கு தான் பாதிப்பு.

வருகிற பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தலைவர் கேப்டன் விஜயகாந்த் முடிவு செய்வார்.

இவ்வாறு விஜய் பிரபாகரன் கூறினார்.

அப்போது கட்சியின் மாநில அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், மாவட்ட செயலாளர்கள் குமார், விஜய் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News