கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர் மீது வழக்கு
- போலீசார் சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
- கலவரத்தை தூண்டும் விதமாக முகநூலில் பதிவிட்ட குட்டி ராஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தச்சநல்லூர் பால் கட்டளையை சேர்ந்த பேச்சி ராஜா (வயது 26) நேற்று முன்தினம் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் எந்த விதமான பதிவும் போடக்கூடாது என்று மாநகர மற்றும் மாவட்ட போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் போலீசார் சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த ஒரு நபர் குட்டி ராஸ் என்ற பெயரில் தனது முகநூல் பக்கத்தில் இரு தரப்பினரிடையே பிரச்சனையை தூண்டும் வகையில் புகைப்படத்துடன் வாசகங்களை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார்.
தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்படும் விதமாகவும், கலவரத்தை தூண்டும் விதமாகவும் பதிவிட்ட குட்டி ராஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.