ரூ.10 லட்சம் கொள்ளை வழக்கு- லோடு ஆட்டோ டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை
- பழைய இரும்புகளை சென்னையில் உள்ள இரும்பு உருக்காலைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
- லோடு ஆட்டோ டிரைவர் சின்னத்துரை கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்துள்ளார். சம்பவத்தன்று அவர் சிலருக்கு போன் செய்து பேசியுள்ளது தெரிய வந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் வடக்கு ஆத்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 40).
தனியார் நிறுவன மேலாளர்
இவர் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் உள்ள ஒரு தனியார் இரும்பு விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனத்தில் இருந்து பழைய இரும்புகளை சென்னையில் உள்ள இரும்பு உருக்காலைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
ரூ. 10 லட்சம் கொள்ளை
அதுபோல உடன்குடியை சேர்ந்த மனோகரன் என்பவருக்கு சொந்தமான உருக்காலைக்கு இரும்பு அனுப்பியதற்கான பணத்தை நேற்று முன்தினம் செந்தில்குமார் வாங்க சென்றார்.
அவர் வசூல் பணம் ரூ. 10 லட்சத்தை வாங்கி கொண்டு தனது நிறுவனத்திற்கு சொந்தமான லோடு ஆட்டோவில் தூத்துக்குடி திரும்பினார்.
லோடு ஆட்டோவை தூத்துக்குடியை சேர்ந்த சின்னத்துரை என்பவர் ஓட்டினார். ஆட்டோ உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் சாலை இசக்கியம்மன் கோவில் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஆட்டோவை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் நைசாக ஆட்டோவில் இருந்த ரூ. 10 லட்சத்தை எடுத்து சென்றனர்.
போலீசார் விசாரணை
இது தொடர்பாக செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
கொள்ளையர்களை பிடிக்க திருச்செந்தூர் டி.எஸ்பி. ஆவுடையப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
டிரைவரை பிடித்து விசாரணை
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர். லோடு ஆட்டோ டிரைவர் சின்னத்துரை கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
சம்பவத்தன்று அவர் சிலருக்கு போன் செய்து பேசியுள்ளதும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் சின்னத்துரையை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.