ஊட்டி அரசு ஆஸ்பத்திரிகளில் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
- மருத்துவ ஊழியர்கள் போதிய பாதுகாப்புடன் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு.
- மாணவிகளிடம் கலந்துரையாடி, பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.
ஊட்டி:
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே பெண் மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் போராட்டம் நடந்தது.
இந்த நிலையில் இந்த சம்பவம் எதிரொலியாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும் ஆய்வு செய்து அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தமிழக டி.ஜி.பி சங்கர் ஜூவால் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து நேற்று ஊட்டி மாவட்ட அரசு மகப்பேறு மருத்து வமனையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மருத்துவமனை வளாகத்துக்குள் வாகனங்கள் வந்து செல்லும் வழி, அறைகள், உள்ளே செல்லும் வழி, வெளியேறும் வழி, எவ்வளவு மருத்துவ பணியாளர்கள் உள்ளனர் என்பது குறித்து கேட்டறிந்தார்.
மேலும் மருத்துவம னையில் எவ்வளவு கண்காணிப்பு காமிராக்கள் உள்ளன? அவற்றில் எத்தனை பயன்பாட்டில் உள்ளது? மருத்துவ ஊழியர்கள் போதிய பாதுகாப்புடன் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மருத்துவ கல்லூரி மாணவிகளிடமும் கலந்துரையாடி, அவர்களிடமும் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.
இதேபோல் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்தராஜன் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்ட பகுதிகள் மற்றும் மருத்துவர்களின் அறைகள், குடியிருப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். கோத்தகிரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில், குன்னூர் டி.எஸ்.பி.பாஸ்கர், கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன், போக்கு வரத்து இன்ஸ்பெக்டர்பதி ஆகியோர் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆஸ்பத்திரியில் எவ்வளவு மருத்துவப் பணியாளர்கள் உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, இது தொடர்பாக ஆஸ்பத்திரியில் இருந்தவர்களிடம் கேட்டறிந்தனர்.
ஊட்டி மகப்பேறு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்ட பின் போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா நிருபர்களிடம் கூறியதாவது:-
மகப்பேறு மருத்துவமனையை பொறுத்த வரை வளாகத்துக்குள் பாதுகாப்புக்காக ஊழியர்கள் உள்ளனர்.
27 கண்காணிப்பு காமிராக்கள் உள்ளது. சில காமிராக்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை சரி செய்ய அறிவுறுத்தி உள்ளோம். மருத்துவமனைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் தினமும் மருத்துவ மனைகளில் காவல்துறை மூலம் ரோந்து பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பான அறிக்கை காவல்துறை தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், மருத்து வர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை மூலமாக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.