காரமடை இந்து முன்னணி அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு
- இந்து முன்னணி அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
- பா.ஜ.க, விஷ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை பகுதியை சேர்ந்த பா.ஜ.க, இந்து முன்னணி மற்றும் விசு வஇந்துபரிசத் அமைப்பை சேர்ந்தவர்கள் அரியானா விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வேண்டி போலீஸ் நிலையத்தில் விண்ணப்பம் செய்தனர்.
ஆனாலும் போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்று தெரிகிறது.எனவே மேற்கண்ட அமைப்புகள் காரமடை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட போவதாக எச்சரிக்கை விடுத்தன.
இந்த நிலையில் இன்று காலை காரமடையில் உள்ள இந்து முன்னணி அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் அந்த பகுதி முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் இந்துமுன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மற்ற அமைப்பை சேர்ந்தவர்களும் அலுவலகம் முன்பு திரண்டு வந்தனர்.
அவர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதேபோல் மேட்டுப்பாளையத்திலும் ஏராளமானவர் போராட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து போலீசார் இந்து முன்னணி நிர்வாகிகள், பா.ஜ.க, விஷ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளுடன் மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதில் பா.ஜக வடக்கு மாவட்ட துணை தலைவர் விக்னேஷ், வி.எச்.பி மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவப்புகழ், பொதுசெயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது இந்துக்களுக்கு எதிராக போலீசார் செயல்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர்.