சுரண்டையில் வாலிபரை கொன்ற தொழிலாளி உள்பட 2 பேருக்கு வலைவீச்சு
- சுரேசுக்கும், அருணாதேவிக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
- அருணா தேவி தனது கணவரை பிரிந்து முத்துக்குமாருடன் சென்று விட்டார்.
சுரண்டை:
சுரண்டை அருகே உள்ள துரைசாமியாபுரத்தை சேர்ந்தவர் சேர்மன். இவருடைய மகன் சுரேஷ்(வயது 30). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருணாதேவிக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
கள்ளக்காதல்
இவருக்கும், சாம்பவர் வடகரையை சேர்ந்த பீடிக்கடையில் பணிபுரியும் ஊழியரான முத்துக்கு மார்(27) என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. கடந்த ஓராண்டுக்கு முன்பு அருணா தேவி தனது கணவரை பிரிந்து முத்துக்குமாருடன் சென்று விட்டார். அவர்கள் 2 பேரும் சுரண்டை வரகுண ராமபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், அவரது சகோதரர் செல்வத்தை அழைத்துக்கொண்டு சுரண்டை வரகுணராமபுரத்துக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக முத்துக்குமாரும், அருணாதேவியும் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அதனை கண்ட சுரேஷ் அவர்களை வழிமறித்து முத்துக்குமாரை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தனர். அதனை தடுக்க முயன்ற அருணா தேவியை அரிவாளால் கையில் வெட்டினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் கண்ணா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று முத்துக்குமார் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரி யில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அருணா தேவிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ், செல்வம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.