உள்ளூர் செய்திகள்

தேன்பொத்தை கிராமத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பானைகள்.

செங்கோட்டை பகுதியில் பொங்கல் பானை- அடுப்பு விற்பனை தீவிரம்

Published On 2023-01-11 08:34 GMT   |   Update On 2023-01-11 08:34 GMT
  • செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியான தேன்பொத்தை, கட்டளைகுடியிறுப்பு, இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு மண்பாண்ட தொழிலே பிரதான தொழிலாகும்.
  • பொங்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தற்போது விற்பனை சூடுபிடித்துள்ளது.

செங்கோட்டை:

செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியான தேன்பொத்தை, கட்டளைகுடியிறுப்பு, இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு மண்பாண்ட தொழிலே பிரதான தொழிலாகும்.

இங்கு மண்னால் தயாரிக்கப்படும் அடுப்பு வகைகள், மண்பானைகள், மண்சட்டிகள், பூந்தொட்டி வகைகள், அகல் விளக்குகள் போன்றவைகள் தயாரித்து உள்ளூர் மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளாவிற்கும் விற்பனை செய்து வருகின்றனர் .

மண் பானைகள், அடுப்புகள் செய்வதையே தங்கள் தொழிலாக செய்து குடும்பம் நடத்தியதோடு தங்கள் குழந்தைகளுக்கும் அதையே கற்று கொடுத்து வந்துள்ளனர் இப்பகுதி மண்பாண்ட தொழிலாளார்கள்.

சுற்று வட்டார பகுதிகளில் இத்தொழிலை நம்பி சுமார் 400 குடும்பங்கள் வரை பார்த்து வந்த இந்த தொழில் தற்போது நலிவடைந்து 50 குடும்பங்கள் மட்டுமே இத்தொழிலை செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் வாரத்திற்கு 1,000 பானைகள் வரை உற்பத்தி செய்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு விற்பனை வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

தற்போது பொங்கல் சீசனை தொடர்ந்து செங்கோட்டையை அடுத்துள்ள காலங்கரை, தேன்பொத்தை கட்டளைகுடியிருப்பு, இலஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்டத் தொழிலாளர்கள் பொங்கலுக்கான பானைகள், அடுப்பு, மண்சட்டி, பானை, பொங்கல்கட்டி தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பொங்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தற்போது விற்பனை சூடுபிடித்துள்ளது.

இது குறித்து தொழிலாளிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் பெரும்பாலோர் பித்தளை, சில்வர் பாத்திரங்களிலேயே பொங்கல் வைக்கும் பழக்கத்திற்கு வந்துவிட்டனர். கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரூ. 50 முதல் ரூ. 150 வரை பானைகள் விற்கப்பட்டது.

ஆள்பற்றாக்குறை, குளங்களில் மண் அள்ள தாலுகா அலுவலகங்களில் காத்திருப்பது, கடந்தாணடில் பெய்த தொடர்மழையால் செய்த பானைகளை பாதுகாக்க இடமின்மை போன்ற பல்வேறு பிரச்சிைன காரணமாக இத்தொழிலில் பெரிய அளவில் வருமானமும் கிடைப்பது இல்லை.

தற்போது பொங்கல் சீசன் என்றாலும் தமிழகத்தில் இருந்து தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஆர்டர்களும் வருவதில்லை.

அதிக அளவில் பொங்கல் பானைகள் கேரள மாநிலத்திற்கே ஏற்றுமதி செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு முறையே தயார் செய்த பனைகள் தற்போது ரூ. 70 முதல் ரூ. 250 வரை விற்கப்படுகிறது.

வரும் காலங்களில் பொங்கல் பரிசுடன் பொங்கல் பானைகளையும் சேர்த்து வழங்கினால் எங்களது வாழ்வாதாரம் பெரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News