உள்ளூர் செய்திகள்

இன்று காணும் பொங்கல் ஆரோவில்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2023-01-17 07:53 GMT   |   Update On 2023-01-17 07:53 GMT
  • 3-ம் நாளான இன்று காணும் பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
  • ஆரோவில் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

விழுப்புரம்:

வானூர் பகுதியில் உள்ள கோட்டக்குப்பம் பகுதியில் ஆரோவில் சர்வதேச நகரம் உள்ளது. இதே பகுதியில் ஆரோபீச் உள்ளது. பொங்கல் திருநாளின் 3-ம் நாளான இன்று காணும் பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தங்கள் உறவினர், நண்பர்களை சந்தித்து ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வர். இது தவிர பிரசித்திப் பெற்ற கோவில்களுக்கு சென்று வழிபட்டு சுற்றுலாத் தளங்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

அதன்படி இன்று காலை முதல் ஆரோவில் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் வந்த சுற்றுலாப் பயணிகள் ஆரோபீச்சின் அழகை கண்டு ரசித்தனர். இங்கு குளிக்க போலீசார் தடை விதித்திருந்ததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதையடுத்து ஆரோவில் சர்வதேச நகரில் உள்ள குளோப் பகுதிக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள இயற்கை அழகினை கண்டு ரசித்தனர்.

கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக விழாக்களின் கொண்டாட்டங்கள் பெரு ம்பாலும் குறைந்துவிட்டன. தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததால் சுற்றுலாப் பயணிகள், இளைஞர்கள், சிறுவர் சிறுமியர் இங்கு குவிந்து காணும் பொங்கலை ஆராவாரமாக கொண்டாடினர். மேலும், பஞ்சவடீ ஆஞ்சனேயர் கோவில், பிரத்தியங்கரா காளி கோவிலிலும் குவிந்த பொதுமக்கள் பயபக்தியுடன் வழிபட்டனர். இதைத் தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றிப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் சென்றனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா அறிவுறுத்தலின் பேரில் கோட்டக்குப்பம், வானூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Tags:    

Similar News