தானியங்கி எந்திரம் மூலம் சொத்துவரி செலுத்தும் நடைமுறை- மேயர் பிரியா தொடங்கிவைத்தார்
- எந்திரத்தில் காசோலை மற்றும் வரைவோலை மூலம் எளிதாக சொத்து வரி செலுத்த முடியும்.
- தானியங்கி எந்திரங்கள் வட்டார துணை கமிஷனர்களின் அலுவலகங்களிலும் நிறுவப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநகராட்சி பகுதியை சுற்றியுள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நிலுவை சொத்து வரியை உடனடியாக செலுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரி சலுகை, ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளையும் எடுத்து வருகிறது.
அந்த வகையில், சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை இணையதளம், இ-சேவை மையம், பாரத் பில் பேமன்ட் முறை, இணைய வங்கி, கியூ-ஆர் கோர்டு, காசோலை மற்றும் வரைவோலை மூலம் செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை தானியங்கி எந்திரம் மூலம் செலுத்தும் நடைமுறையை சென்னை மாநகராட்சி நேற்று தொடங்கியது. சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் தானியங்கி எந்திரத்தின் செயல்பாட்டை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கிவைத்தார்.
பெடரல் வங்கியுடன் இணைந்து சென்னை மாநகராட்சி இதை நிறுவியுள்ளது. இந்த தானியங்கி எந்திரத்தில் காசோலை மற்றும் வரைவோலை மூலம் எளிதாக சொத்து வரி செலுத்த முடியும். இதற்கான ரசீதும் இந்த எந்திரத்தில் பெற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த தானியங்கி எந்திரங்கள் வட்டார துணை கமிஷனர்களின் அலுவலகங்களிலும் நிறுவப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர் விசு மகாஜன், மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம் மற்றும் வருவாய்துறை உயர் அலுவலகர்கள் கலந்துகொண்டனர்.