ராமநாதபுரத்தில் தொழிலாளி அடித்துக்கொலை
- பலத்த காயம் அடைந்த ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே கிழக்கு சாயகார ஊரணியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ரவிக்குமார் (வயது 35). ராமநாதபுரம் மாவட்டம் சணல்வேலி அருகே உள்ள செட்டியகோட்டை என்ற ஊரை சேர்ந்தவர் கணேசன் (40). இவர் ரவிக்குமாரின் அக்காள் கணவரின் தம்பி ஆவார். இவர் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
ரவிக்குமார் ராமநாதபுரம் அரண்மனை அருகே உள்ள பெருமாள் ஆசாரி என்பவருக்கு சொந்தமான அப்பார்ட்மெண்டில் கடந்த 3 ஆண்டுகளாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கூலி செய்து வந்தார்.
அதே அப்பார்ட்மெண்டில் கணேசனும் குடியிருந்து வருகிறார். இருவரும் உறவினர்கள் என்பதால் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது அருந்து விட்டு வருவது வழக்கம்.
சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு இருவரும் சென்றுள்ளனர். நன்றாக குடித்தனர். அதன் பிறகு போதை தலைக்கு ஏற தள்ளாடியபடியே இருவரும் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இதில் இருவருக்கும் இடையில் மதுபோதையில் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த ரவிக்குமார் அருகில் கிடந்த செங்கலை எடுத்து கணேசனை தாக்கினார்.
இதற்கு பதிலடியாக அருகில் இருந்த மூங்கில் கம்பை எடுத்து ரவிக்குமாரின் தலையில் ஒரே போடாக போட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
உடனடியாக தகவல் அறிந்த கேணிக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரவிக்குமாரின் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.