கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு: கருப்பு கொடி காட்டி காங்கிரசார் போராட்டம்
- கவர்னர் 2 நாள் சுற்றுப்பயணமாக நாகைக்கு வருகை தந்துள்ளார்.
- உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை.
நாகப்பட்டினம்:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக நாகை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.
சென்னையில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் திருச்சி வந்து இறங்கியவர் சாலை மார்க்கமாக வேதாரண்யம் வருகை தந்தார்.
வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன் பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என்.ரவி உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அருகில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாறு புகைப்படங்களை பார்வையிட்டார். பின்னர் வேதாரண்யத்தில் இருந்து புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு சென்ற கவர்னர் இரவு அங்குள்ள தனியார் விடுதியில் தங்கினார்.
இன்று காலை நாகை மீன்வள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் கலந்து கொள்கிறார்.இந்நிலையில் நாகையில் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் அமிர்த ராஜா தலைமையில் கட்சியினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் நாகை புத்தூர் மேம்பாலம் அருகே கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பேராட்டத்தில் ஈடுப்பட்ட காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.