புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: மன்னார்குடியில், வழக்கறிஞர்கள் ரெயில் மறியல் போராட்டம்
- ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சுமார் ½ மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.
மன்னார்குடி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பணியை புறக்கணித்து சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இளஞ்சேரன் தலைமையில் வழக்கறிஞர்கள் மன்னார்குடி- மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
தகவல்அறிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அதன் பின்னர், சுமார் ½ மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.