உள்ளூர் செய்திகள்

காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Published On 2024-07-13 09:09 GMT   |   Update On 2024-07-13 09:09 GMT
  • நீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதியடைந்து வந்தனர்.
  • சீர்காழி- திருமுல்லைவாசல் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட வழுதலைக்குடி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியதால் திருமுல்லைவாசல் ஊராட்சியில் இருந்து கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. வருகின்ற குடிநீரும் அழுக்காக நிறம் மாறி வந்தது. இதனால் அந்த நீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதியடைந்து வந்தனர்.

இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இன்று காலை வழுதலைக்குடி கிராமத்தில் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து வந்த சீர்காழி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் வந்து சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவதாக பெண்கள் கூறினர். தொடர்ந்து சாலை மறியல் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தால் சீர்காழி- திருமுல்லைவாசல் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News